36:1 பின்னும் எலிகூ:
36:2 நான் பேசிமுடியுமட்டும் சற்றே பொறும்; இன்னும் தேவன்பட்சத்தில் நான் சொல்லவேண்டிய நியாயங்களை உமக்குச் சொல்லிக்காண்பிப்பேன்.
36:3 நான் தூரத்திலிருந்து என் ஞானத்தைக் கொண்டுவந்து, என்னை உண்டாக்கினவருடைய நீதியை விளங்கப்பண்ணுவேன்.
36:4 மெய்யாகவே என் வார்த்தைகள் பொய்யற்றிருக்கும்; உம்மோடே பேசுகிறவன் அறிவில் தேறினவன்.
36:5 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர், அவர் ஒருவரையும் புறக்கணியார்; மன உருக்கத்திலும் அவர் மகத்துவமுள்ளவர்.
36:6 அவர் துன்மார்க்கரைப் பிழைக்க ஒட்டாதிருக்கிறார்; சிறுமையானவர்களின் நியாயத்தை விசாரிக்கிறார்.
36:7 அவர் தம்முடைய கண்களை நீதிமான்களைவிட்டு விலக்காமல், அவர்களை ராஜாக்களோடே கூடச் சிங்காசனத்தில் ஏறவும், உயர்ந்த ஸ்தலத்தில் என்றைக்கும் உட்கார்ந்திருக்கவும் செய்கிறார்.
36:8 அவர்கள் விலங்குகள் போடப்பட்டு, உபத்திரவத்தின் கயிறுகளால் கட்டப்பட்டிருந்தாலும்,
36:9 அவர், அவர்கள் கிரியையையும், மிஞ்சிப்போன அவர்களுடைய மீறுதல்களையும் அவர்களுக்குத் தெரியப்படுத்தி,
36:10 அக்கிரமத்தை விட்டுத் திரும்பும்படி அவர்கள் செவியைத் திறந்து கடிந்துகொள்ளுகிறார்.
36:11 அவர்கள் அடங்கி அவரைச் சேவித்தால், தங்கள் நாட்களை நன்மையாகவும், தங்கள் வருஷங்களைச் செல்வவாழ்வாகவும் போக்குவார்கள்.
36:12 அடங்கார்களேயாகில் பட்டயத்துக்கு இரையாகி, ஞானம் அடையாமல் மாண்டுபோவார்கள்.
36:13 மாயமுள்ள இருதயத்தார் குரோதத்தைக் குவித்துக்கொள்ளுகிறார்கள்; அவர்களை அவர் கட்டிவைக்கும்போது கெஞ்சிக் கூப்பிடுவார்கள்.
36:14 அவர்கள் வாலவயதிலே மாண்டுபோவார்கள்; இலச்சையானவர்களுக்குள்ளே அவர்கள் பிராணன் முடியும்.
36:15 சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு நீங்கலாக்கி, அவர்கள் ஒடுக்கப்பட்டிருக்கையில் அவர்கள் செவியைத் திறக்கிறார்.
36:16 அப்படியே அவர் உம்மையும் நெருக்கத்தினின்று விலக்கி, ஒடுக்கமில்லாத விசாலத்திலே வைப்பார்; உம்முடைய போஜனபந்தி கொழுமையான பதார்த்தங்களால் நிறைந்திருக்கும்.
36:17 ஆகாதவன்மேல் வரும் நியாயத்தீர்ப்பு நிறைவேறப் பார்ப்பீர்; நியாயமும் நீதியும் உம்மை ஆதரிக்கும்.
36:18 உக்கிரமுண்டாயிருக்கிறதினால் அவர் உம்மை ஒரு அடியினால் வாரிக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; அப்பொழுது மீட்கும் பொருளை மிகுதியாய்க் கொடுத்தாலும் அதற்கு நீர் நீங்கலாகமாட்டீர்.
36:19 உம்முடைய செல்வத்தை அவர் மதிப்பாரோ? உம்முடைய பொன்னையும், பூரண பராக்கிரமத்தையும் அவர் மதிக்கமாட்டாரே.
36:20 ஜனங்கள் தங்கள் இடத்தை விட்டு வாரிக்கொள்ளப்படப்போகிற இரவை வாஞ்சிக்காதிரும்.
36:21 அக்கிரமத்துக்குத் திரும்பாதபடிக்கு எச்சரிக்கையாயிரும்; உபத்திரவத்தைப்பார்க்கிலும் அக்கிரமத்தைத் தெரிந்துகொண்டீரே.
36:22 இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார்; அவரைப்போல் போதிக்கிறவர் யார்?
36:23 அவருடைய வழியின் நியாயத்தை விசாரிக்கத்தக்கவன் யார்? நீர் அநியாயம் செய்தீர் என்று சொல்லத்தக்கவன் யார்?
36:24 மனுஷர் நோக்கிப்பார்க்கிற அவருடைய கிரியையை நீர் மகிமைப்படுத்த நினையும்.
36:25 எல்லா மனுஷரும் அதைக் காண்கிறார்களே; தூரத்திலிருந்து அது மனுஷருக்கு வெளிப்படுகிறது.
36:26 இதோ, தேவன் மகத்துவமுள்ளவர்; நாம் அவரை அறிய முடியாது; அவருடைய வருஷங்களின் இலக்கம் ஆராய்ந்து முடியாதது.
36:27 அவர் நீர்த்துளிகளை அணுவைப்போல ஏறப்பண்ணுகிறார்; அவைகள் மேகத்திலிருந்து மழையாய்ச் சொரிகிறது.
36:28 அதை மேகங்கள் பெய்து, மனுஷர்மேல் மிகுதியாய்ப் பொழிகிறது.
36:29 மேகங்களின் பரவுதலையும், அவருடைய கூடாரத்திலிருந்து எழும்பும் குமுறல்களையும் அறியமுடியுமோ?
36:30 இதோ, அதின்மேல் தம்முடைய மின்னலின் ஒளியை விரிக்கிறார்; சமுத்திரத்தின் ஆழங்களையும் மூடுகிறார்.
36:31 அவைகளால் ஜனங்களை தண்டிக்கிறவரும், ஆகாரங்கொடுத்து இரட்சிக்கிறவருமாயிருக்கிறார்.
36:32 அவர் மின்னலின் ஒளியைத் தமது கைக்குள்ளே மூடி, அது இன்னின்னதை அடிக்கவேண்டுமென்று கட்டளையிடுகிறார்.
36:33 அதினால் அவர் செய்ய நினைக்கிறதையும், மந்தாரம் எழும்பப்போகிறதையும், ஆடுமாடுகள் அறியப்படுத்தும்.

