10:1 என் ஆத்துமா ஜீவனை ஆரோசிக்கிறது, நான் என் துயரத்துக்கு எனக்குள்ளே இடங்கொடுத்து, என் மனச்சஞ்சலத்தினாலே பேசுவேன்.
10:2 நான் தேவனை நோக்கி: என்னைக் குற்றவாளியென்று தீர்க்காதிரும்; நீர் எதினிமித்தம் என்னோடே வழக்காடுகிறீர், அதை எனக்குத் தெரியப்படுத்தும் என்பேன்.
10:3 நீர் என்னை ஒடுக்கி, உம்முடைய கைகளின் கிரியையை வெறுத்து, துன்மார்க்கரின் யோசனையைக் கிருபையாய்ப் பார்க்கிறது உமக்கு நன்றாயிருக்குமோ?
10:4 மாம்சக் கண்கள் உமக்கு உண்டோ? மனுஷன் பார்க்கிறபிரகாரமாய்ப் பார்க்கிறீரோ?
10:5 நீர் என் அக்கிரமத்தைக் கிண்டிக்கிளப்பி, என் பாவத்தை ஆராய்ந்து விசாரிக்கிறதற்கு,
10:6 உம்முடைய நாட்கள் ஒரு மனுஷனுடைய நாட்களைப்போலவும், உம்முடைய வருஷங்கள் ஒரு புருஷனுடைய ஜீவகாலத்தைப்போலவும் இருக்கிறதோ?
10:7 நான் துன்மார்க்கன் அல்ல என்பது உமக்குத் தெரியும்; உம்முடைய கைக்கு என்னைத் தப்புவிக்கிறவன் இல்லை.
10:8 உம்முடைய கரங்கள் என்னையும் எனக்குரிய எல்லாவற்றையும் உருவாக்கிப் படைத்திருந்தும், என்னை நிர்மூலமாக்குகிறீர்.
10:9 களிமண்போல என்னை உருவாக்கினீர் என்பதையும், என்னைத் திரும்பத் தூளாகப்போகப்பண்ணுவீர் என்பதையும் நினைத்தருளும்.
10:10 நீர் என்னைப் பால்போல் வார்த்து, தயிர்போல் உறையப்பண்ணினீர் அல்லவோ?
10:11 தோலையும் சதையையும் எனக்குத் தரித்து, எலும்புகளாலும் நரம்புகளாலும் என்னை இசைத்தீர்.
10:12 எனக்கு ஜீவனைத் தந்ததும் அல்லாமல், தயவையும் எனக்குப் பாராட்டினீர்; உம்முடைய பராமரிப்பு என் ஆவியைக் காப்பாற்றினது.
10:13 இவைகள் உம்முடைய உள்ளத்தில் மறைந்திருந்தாலும், இது உமக்குள் இருக்கிறது என்று அறிவேன்.
10:14 நான் பாவஞ்செய்தால், அதை நீர் என்னிடத்தில் விசாரித்து, என் அக்கிரமத்தை என்மேல் சுமத்தாமல் விடீர்.
10:15 நான் துன்மார்க்கனாயிருந்தால் எனக்கு ஐயோ! நான் நீதிமானாயிருந்தாலும் என் தலையை நான் எடுக்கமாட்டேன்; அவமானத்தால் நிரப்பப்பட்டேன்; நீர் என் சிறுமையைப்பார்த்தருளும், அது அதிகரிக்கிறது.
10:16 சிங்கத்தைப்போல என்னை வேட்டையாடி, எனக்கு விரோதமாய் உமது அதிசயவல்லமையை விளங்கப்பண்ணுகிறீர்.
10:17 நீர் உம்முடைய சாட்சிகளை எனக்கு விரோதமாய் இரட்டிக்கப் பண்ணுகிறீர்; என்மேல் உம்முடைய கோபத்தை அதிகரிக்கப்பண்ணுகிறீர்; போராட்டத்தின்மேல் போராட்டம் அதிகரிக்கிறது.
10:18 நீர் என்னைக் கர்ப்பத்திலிருந்து புறப்படப்பண்ணினது என்ன? ஓரு கண்ணும் என்னைக் காணாதபடி, நான் அப்பொழுதே ஜீவித்துப்போனால் நலமாமே.
10:19 நான் ஒருக்காலும் இல்லாதது போலிருந்து, கர்ப்பத்திலிருந்து பிரேதக்குழிக்குக் கொண்டுபோகப்பட்டிருப்பேன்.
10:20 என் நாட்கள் கொஞ்சமல்லவோ?
10:21 காரிருளும் மரணாந்தகாரமுமான இருண்ட தேசமும், இருள்சூழ்ந்த ஒழுங்கில்லாத மரணாந்தகாரமுள்ள தேசமும், ஒளியும் இருளாகும் தேசமுமாகிய, போனால் திரும்பிவராத தேசத்துக்கு, நான் போகுமுன்னே,
10:22 நான் சற்று இளைப்பாறும்படி நீர் என்னைவிட்டு ஓய்ந்திரும் என்றான்.

