11:1 கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
11:2 நீங்கள் இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் புசிக்ககத்தக்க ஜீவ ஜந்துக்கள் யாதெனில்:
11:3 மிருகங்களில் விரிகுளம்புள்ளதாயிருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிறதுமானவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
11:4 ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளதுமானவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாயிருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாதபடியால், அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
11:5 குழிமுசலானது அசைபோடுகிறதாயிருந்தாலும். அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
11:6 முயலானது அசைபோடுகிறதாயிருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
11:7 பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாக பிரிந்ததுமாயிருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாயிருக்கும்.
11:8 இவைகளின் மாம்சத்தைப் புசிக்கவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
11:9 ஜலத்திலிருக்கிறவைகளில் நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் புசிக்கலாம்.
11:10 ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
11:11 அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவைகளின் மாம்சத்தைப் புசியாதிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக.
11:12 தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது.
11:13 பறவைகளில் நீங்கள் புசியாமல் அருவருக்க வேண்டியவைகள் யாதெனில்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
11:14 பருந்தும், சகலவித வல்லூறும்,
11:15 சகலவித காகங்களும்,
11:16 தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும்,
11:17 ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும்,
11:18 நாரையும், கூழக்கடாவும், குருகும்,
11:19 கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே.
11:20 பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
11:21 ஆகிலும், பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற யாவிலும், நீங்கள் புசிக்கத்தக்கது யாதெனில்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,
11:22 வெட்டுக்கிளி ஜாதியாயிருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிஜாதியாயிருக்கிறதையும் நீங்கள் புசிக்கலாம்.
11:23 பறக்கிறவைகளில் நாலுகாலால் நடமாடுகிற மற்ற யாவும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
11:24 அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
11:25 அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
11:26 விரிநகங்களுள்ளவைகளாயிருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.
11:27 நாலுகாலால் நடக்கிற சகல ஜீவன்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற யாவும் உங்களுக்கு அசுத்தமாயிருப்பதாக; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான.
11:28 அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலம்மட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
11:29 தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையெனில்: பெருச்சாளியும், எலியும், சகலவித ஆமையும்,
11:30 உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.
11:31 சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
11:32 அவைகளில் செத்தது ஒன்று யாதொன்றின்மேல் விழுந்தால் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், வஸ்திரமானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் சாயங்காலமட்டும் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.
11:33 அவைகளில் ஒன்று மண்பாண்டத்திற்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை யாவும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.
11:34 புசிக்கத்தக்க போஜனபாதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப் பானமும் அப்படிப்பட்ட பாத்திரமும் தீட்டுப்படும்.
11:35 அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுந்ததோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
11:36 ஆனாலும், நீரூற்றும் மிகுந்த ஜலம் உண்டாகிய கிணறும் சுத்தமாயிருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான்.
11:37 மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால் அது தீட்டுப்படாது;
11:38 அந்த உடலில் யாதொன்று தண்ணீர் வார்க்கப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
11:39 உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத் தொடுகிறவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
11:40 அதின் மாமசத்தைப் புசித்தவன் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவன் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துப்போனவனும் தன் வஸ்திரங்களைத் தோய்க்கக்கடவன்; அவனும் சாயங்காலமட்டும் தீட்டுப்பட்டிருப்பான்.
11:41 தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருக்கக்கடவது; அவை புசிக்கப்படலாகாது.
11:42 தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நாலுகாலால் நடமாடுகிறவைகளையும், அநேகங் கால்களுள்ளவைகளையும் புசியாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.
11:43 ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களை அருவருப்பாக்கிக்கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.
11:44 நான் உங்கள் தேவனாகிய கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராயிருப்பீர்களாக.
11:45 நான் உங்கள் தேவனாயிருக்கும்படி உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரப்பண்ணின கர்த்தர், நான் பரிசுத்தர்; ஆகையால், நீங்களும் பரிசுத்தராயிருப்பீர்களாக.
11:46 சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், புசிக்கத்தக்க ஜந்துக்களுக்கும், புசிக்கத்தகாத ஜந்துக்களுக்கும் வித்தியாசம்பண்ணும்பொருட்டு,
11:47 மிருகத்துக்கும் பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல ஜீவஜந்துக்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் அடுத்த பிரமாணம் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.

