6:1 என் மகனே, நீ உன் சினேகிதனுக்காகப் பிணைப்பட்டு, அந்நியனுக்குக் கையடித்துக்கொடுத்தாயானால்,
6:2 நீ உன் வாய்மொழிகளால் சிக்குண்டாய், உன் வாயின் வார்த்தைகளால் பிடிபட்டாய்.
6:3 இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்றுசெய்.
6:4 உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
6:5 வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.
6:6 சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
6:7 அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,
6:8 கோடைகாலத்தில் தனக்கு ஆகாரத்தைச் சம்பாதித்து, அறுப்புக்காலத்தில் தனக்குத் தானியத்தைச் சேர்த்துவைக்கும்.
6:9 சோம்பேறியே, நீ எவ்வளவுநேரம் படுத்திருப்பாய்? எப்பொழுது உன் தூக்கத்தைவிட்டு எழுந்திருப்பாய்?
6:10 இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும்; இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
6:11 உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆயதமணிந்தவனைப்போலவும் வரும்.
6:12 பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான்.
6:13 அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.
6:14 அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப் பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான்.
6:15 ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
6:16 ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
6:17 அவையாவன: மேட்டிமையான கண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை,
6:18 துராலோசனையைப் பிணைக்கும் இருதயம், தீங்கு செய்வதற்கு விரைந்தோடுங்கால்,
6:19 அபத்தம்பேசும் பொய்ச்சாட்சி, சகோதரருக்குள்ளே விரோதத்தை உண்டுபண்ணுதல் ஆகிய இவைகளே.
6:20 என் மகனே, உன் தகப்பன் கற்பனையைக் காத்துக்கொள்; உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
6:21 அவைகளை எப்பொழுதும் உன் இருதயத்திலே அணிந்து, அவைகளை உன் கழுத்திலே கட்டிக்கொள்.
6:22 நீ நடக்கும்போது அது உனக்கு வழிகாட்டும்; நீ படுக்கும்போது அது உன்னைக் காப்பாற்றும்; நீ விழிக்கும்போது அது உன்னோடே சம்பாஷிக்கும்.
6:23 கட்டளையே விளக்கு, வேதமே வெளிச்சம், போதகசிட்சையே ஜீவவழி.
6:24 அது உன்னைத் துன்மார்க்க ஸ்திரீக்கும், இச்சகம்பேசும் நாவையுடைய பரஸ்திர்க்கும் விலக்கிக் காக்கும்.
6:25 உன் இருதயத்திலே அவள் அழகை இச்சியாதே; அவள் தன் கண்ணிமைகளினால் உன்னைப் பிடிக்கவிடாதே.
6:26 வேசியினிமித்தம் ஒரு அப்பத்துணிக்கையையும் இரக்கவேண்டியதாகும்; விபசாரியானவள் அருமையான உயிரை வேட்டையாடுகிறாள்.
6:27 தன் வஸ்திரம் வேகாமல் மடியிலே எவனாவது நெருப்பை வைத்துக்கொள்ளக்கூடுமோ?
6:28 தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?
6:29 பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத்தொடுகிற எவனும, ஆக்கினைக்குத் தப்பான்.
6:30 திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்;
6:31 அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழு மடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.
6:32 ஸ்திர்யுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப் போடுகிறான்.
6:33 வாதையையும் இலச்சையையும் அடைவான்; அவன் நிந்தை ஒழியாது
6:34 ஸ்திரீயைப்பற்றிய எரிச்சல் புருஷனுக்கு மூர்க்கத்தை உண்டுபண்ணும; அவன் பழிவாங்கும் நாளில் தப்பவிடான்.
6:35 அவன் எந்த ஈட்டையும் பாரான்; அநேகம் வெகுமதிகளைக் கொடுத்தாலும் அமர்ந்திருக்கமாட்டான்.

